செய்திகள் பிரதானசெய்திகள்

விடுதலைபுலிகள் மீதான தடையை நீக்காமைக்கு இதுதான் காரணம் : சுரேஸ் அதிரடி

இலங்கை அரசாங்கம் விடுதலை புலிகள் மீதான தடையை நீக்காமல் இருப்பது தமது அரசியல் பிழைப்பிற்காகவே என, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திர இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேற்படி தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“உரிமைகளைப் பாதுகாக்கவும் அடக்குமுறைகள் ஆக்கிரமிப்புகளிலிருந்து விடுபடவும் உலகெங்கும் ஆயுதப் போராட்டங்கள் உட்பட பல்வேறு வகையான போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

இவ்வாறு பல்வேறு நாடுகளும் தமது நாட்டை முழுமையாகவோ பகுதியாகவோ ஆக்கிரமிக்க முனைந்த எதிரிநாடுகளுடன் யுத்தங்களில் ஈடுபட்டு தமது நாட்டினைப் பாதுகாக்க உயிர்த்தியாகம் செய்தவர்களை மாவீரர்களாக போற்றி நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட்டு மக்களால் நினைவுகூரப்பட்டும் மரியாதை செலுத்தப்பட்டும் வருகின்றமை உலக வழக்கமாகும்.

அந்தவகையில் இலங்கையில் காலனித்துவத்திற்கு எதிரான போராட்டங்கள் பாரிய அளவில் நடைபெறாத போதிலும் காலனித்துவத்திற்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் கூட காலனித்துவ ஆட்சியாளர்களால் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டனர்.

மேலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசு, அவர்களை காலனித்துவத்திற்கு எதிராகப் போராடிய கதாநாயகர்களாக பிரகடனம் செய்துள்ளது.

எந்தவொரு நாட்டிலும் தேசிய இன விடுதலைக்காகப் போராடி உயிர்த்தியாகம் செய்த போராளிகளையும் மக்களையும் நினைவுகூர்வதும் மரியாதை செலுத்துவதும் உலக வழக்கம் மட்டுமல்ல அந்தந்த மக்களின் உரிமையும் கடமையும் ஆகும்.

இதனை மறுதலித்து மாவீரர்தினம் கொண்டாடக்கூடாதென இலங்கை அரசாங்கம் அறிவித்திருப்பதானது உலக நாகரிகத்திற்கு முரணானதும் அடிப்படை மனித உரிமை மீறலாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டதாகப் பிரகடனம் செய்துள்ள அரசாங்கம், விடுதலைப் புலிகள் மீதான தடையை இன்னமும் நீக்காமல் இருப்பது தென்னிலங்கையில் அரசியல் பிழைப்பு நடத்துவதற்கான குறுகிய அரசியல் நோக்கம் கொண்டதேயாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

 

மூலம் :- தமிழ்பக்கம்

(Visited 167 times, 1 visits today)
Open