Wednesday, 8 January 2020

இந்திய அணிக்கு சவால் விடும் அவுஸ்ரேலிய அணித்தலைவர்

இந்திய அணி கடந்த முறை எதிர்கொண்ட அவுஸ்ரேலிய அணியில் இருந்து தற்போதுள்ள அணி முற்றிலும் மாறுபட்டது என அவுஸ்ரேலிய டெஸ்ட் அணியின் தலைவர் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி கடந்த 2018 ஆம் ஆண்டு அவுஸ்ரேலியாவிற்கு சுற்றுப் பயணம் செய்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அந்தத் தொடரை 2-1 என இந்தியா கைப்பற்றி வரலாற்று சாதனைப் படைத்தது.

தடை காரணமாக அவுஸ்ரேலிய அணியில் டேவிட் வோர்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் அப்போது விளையாடவில்லை. தற்போது அவர்கள் அணிக்கு திரும்பியுள்ளனர்.

அதேவேளையில், அண்மையில் பிரகாசித்து வரும் மார்னஸ் லாபுஸ்சான்னே 3 ஆவது இடத்திற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார். பந்து வீச்சில் பேட் கம்மின்ஸ் மிக சிறந்த நிலையில் இருக்கிறார்.

அண்மையில் நிறைவு பெற்ற பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களை வெள்ளையடிப்பு மூலம் அவுஸ்ரேலியா வெற்றி கொண்டு, அசைக்க முடியாத அணியாக திகழ்ந்து வருகின்றது.

இந்த வருடம் அவுஸ்ரேலியாவில் இடம்பெறவுள்ள ரி-20 உலகக் கிண்ணத் தொடர் முடிந்த உடன் இந்தியாவுடன் டெஸ்ட் தொடரில் அவுஸ்ரேலியா விளையாடுகிறது.

இந்நிலையில், இந்தியா தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று அவுஸ்ரேலிய டெஸ்ட் அணித்தலைவர் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ”இந்த கோடைக்காலத்தில் ஐந்து போட்டிகளையும் வெல்வோம் என்ற எதிர்பார்ப்புடன் வந்தேன். நாங்கள் ஒரு அணியாக ஒன்றிணைந்து உண்மையிலேயே தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம் என நம்புகிறேன்.

துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சில் அதிகமான ‘மேட்ச் வின்னர்’ வீரர்களை பெற்றுள்ளோம். கடந்த 12 மாதங்களில் சுமாராக விளையாடிய வீரர்கள் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

நாங்கள் விரும்பிய வகையில் தற்போது மிகவும் இரக்கமற்ற அணியாக மாறியுள்ளோம். எங்கள் அணி முழுவதும் தரமான வீரர்கள்.

கடந்த முறை விளையாடிய அவுஸ்ரேலிய அணியை விட இந்தியாவுக்கு எதிராக விளையாட உள்ளது முற்றிலும் மாறுபட்ட அணி. இரு அணி தொடர்களுக்கும் இடையில் டெஸ்ட் சம்பியன்ஷிப்பும் உள்ளது. இரண்டு அணிகளும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் இருக்கும்.

எங்களுடைய ஆட்டம் இப்படியே தொடரும் என்றால், உலகின் முதல் இரண்டு அணிகளில் டெஸ்ட் தொடரில் பலப்பரீட்சை நடத்துகின்றன என்று பேசும் நிலையில், தொடர் அற்புதமானதாக இருக்கும்” என்றார்.

இதேவேளை, நியூசிலாந்துக்கு எதிரான சிட்னி போட்டியில் இரட்டை சதம் அடித்த லபுஸ்சாக்னே, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில், இந்திய தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் லபுஸ்சாக்னே, இந்தியாவை இந்திய மண்ணில் எதிர்கொள்வதை விட கடினமானது ஏதுமில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில் ”இந்தியாவில் எப்போதெல்லாம் விளையாடுகிறமோ, அப்போதெல்லாம் அது கடினமான தொடராக இருக்கும். ஏனென்றால், அவர்கள் மிகவும் கடினமாக எதிரணி. அவர்கள் சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளனர். ஆகவே, இந்த தொடர் சவாலானதாக இருக்கும்.

ஆனால் ஒரு வீரர், அவரை பரிசோதனை செய்து கொள்ள கடினமான சூழ்நிலையில் சிறந்த எதிரணியை எதிர்த்து விளையாட விரும்புவார்கள். இந்தியாவை இந்தியாவில் எதிர்கொள்வதை விட கடினம் ஏதும் இல்லை” என்றார்.

அவுஸ்ரேலிய டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ள லபுஸ்சாக்னே அபார ஆட்டத்தால் தலைசிறந்த நட்சத்திர வீரராக உருவாகியுள்ளார். கடந்த ஐந்து போட்டிகளில் நான்கில் சதம் அடித்து அசத்தினார். விரைவாக 1000 ஓட்டங்களை கடந்த வீரர்கள் பட்டியலில் டொன் பிராட்மேன் சாதனையை முறியடித்துள்ளார்.

Rea es:
SHARE THIS

Author:

Lankamurasu.Lk - Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News