Latest Posts

Sunday, 19 January 2020

காத்தான்குடியில் திடீர் சுற்றிவளைப்பு : 29 பேர் கைது

காத்தான்குடியில் திடீர் சுற்றிவளைப்பு : 29 பேர் கைது

காத்தான்குடியில் பொலிசார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போது ஆறு மணித்தியாலங்களில் பிடிவிறாந்து பிறக்கப்பட்டு தேடப்பட்டுவந்த 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் 2690 மில்லிகிறாம் கஞ்சாவுடன் மூவரும், 180 மில்லி கிறாம் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவரும் , சட்டவிரோதமான முறையில் வாகனம் செலுத்திய 20 பேருமாக மொத்தம் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று சனிக்கிழமை மாலை 4 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவன் மெண்டிசின் உத்தரவின் பேரில் உதவி பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில் இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட நபர்கள் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சியில் பகிரங்கமாக நடத்தப்படும் விபச்சார விடுதி

கிளிநொச்சியில் பகிரங்கமாக நடத்தப்படும் விபச்சார விடுதி

கிளிநொச்சி- விநாயகர்புரம் பகுதியில் இடம்பெற்று வரும் விபச்சார விடுதியை அங்கிருந்து அகற்றுவதுடன் அதனை நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கோரி பிரதேசமக்கள் போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர்.

தனிநபர் ஒருவர் பிற பிரதேசங்களிலிருந்து அங்கு பெண்களை அழைத்து வந்து விடுதி ஒன்றை நடத்தி வருவதாகவும், இதனால் தமது கிராமத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதனை தடுப்பதற்கு பிரதேச இளைஞர்கள் பல முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அது பலனளிக்கவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் எதிர்காலத்தில் மோசமான விளைவுகள் ஏற்படக்கூடிய நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டிய மக்கள், குறித்த சமூக சீரழிவிற்கு 15 வயதிற்கு குறைந்த சிறுவர்களும் செல்வதை அவதானித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் கிராமத்தில் மணம் முடித்தல், காணிகளை வாங்க விரும்புவோர் கிராமத்தின் பெயரை கேட்டு விலகி செல்வதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த சமூக விரோத செயற்பாட்டினை கட்டுப்படுத்துமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Monday, 13 January 2020

இதுதான் இறுதி மரணமாக இருக்குமா? கொழும்பிலிருந்து அகிலன்

இதுதான் இறுதி மரணமாக இருக்குமா? கொழும்பிலிருந்து அகிலன்

18 வயதில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவில் வைக்கப்பட்ட தமிழ் இளைஞர் ஒருவர் தனது வாழ்நாளை சிறைச்சாலைக்குள் தொலைத்துவிட்ட நிலையில் 46 ஆவது வயதில் மரணமடைந்திருக்கின்றார். புதுவருட தினத்தன்று கொழும்பு, மகசின் சிறைச்சாலையில் அவர் இறந்த செய்தி அதிர்ச்சியளிப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.

27 வருடகால சிறைவாசத்தில் பரிசாகக் கிடைத்த நோய்களுக்கு எதிராகப் போராடி அதில்  தோல்வியடைந்த நிலையில் அவர் மரணமடைந்த போது, அவருக்கென யாரும் இருக்கவில்லை. யாருமற்ற ஒரு அனாதையாகவே அவர் மரணமடைந்திருக்கின்றார்.

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகி வீட்டில் இருந்தபோது, கிழக்கில் 600 பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவத்தில் சந்தேகநபராக 1993 இல் இவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். மட்டக்களப்பு, மொறக்கொட்டான்சோலையைச் சேர்ந்த செல்லப்பிள்ளை மகேந்திரன் என்ற நபரே இவ்வாறு 27 வருடங்களைச் சிறையில் தொலைத்துவிட்ட நிலையில் உயிரிழந்திருக்கின்றார். இவரது மரணம் சிறைச்சாலையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியிருக்கின்றது. அதேவேளையில், பலமான செய்தி ஒன்றையும் சொல்லிச் சென்றிருக்கின்றது. இவ்வாறான மரணங்கள் இனியும் தொடருமா என்ற கேள்வியும் எழுப்பப்படுகின்றது.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த  இவருக்கு சிறைச்சாலையில் சீரான மருத்துவ வசதிகள் இருக்கவில்லை. பொதுவாக சிறைச்சாலைகளில் காணப்படும் நிலை இதுதான். அதிலும் தமிழ்க் கைதி என்றால், கவனிப்பு எப்படியிருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். கடந்த சில மாதங்களாக கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், இரண்டு வாரங்களுக்கு முன் மகசீன் சிறையில் இருந்து வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார் எனவும், பின்னர்  அங்கிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகளவு காலம் சிறையில் இருந்த மூத்த அரசியல் கைதியாக இவர் இருந்துள்ளார். இவரது பெற்றோர் ஆரம்ப காலங்களில் இவரை வந்து பார்வையிட்டபோதும் பின்னர் அவர்களும் மகனின் நினைவுகளுடன் மரணித்து விட்டனர். அந்த மரணச் சடங்குகளுக்குக் கூட சென்றுவருவதற்கு மகேந்திரனுக்கு அனுமதி கிடைக்கவில்லை.

இதன் பின்னர் இவரை எவரும் சிறைச்சாலைக்கு வந்து பார்வையிடுவது கிடையாது. நோய்களுடன் தனிமையும் அவரை மோசமாகப் பாதித்திருக்க வேண்டும். பொலிஸார் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இவருக்கு  ஒரு ஆயுள் தண்டனையும், 50 வருடங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.

சிறைத்தண்டனை என்பது கைதிகளைத் திருத்துவதற்காக வழங்கப்படுவது. புனர்வாழ்வின் மூலம் மறுவாழ்வை அவர்களுக்குப் பெற்றுக் கொடுப்பதுதான் சிறைத்தண்டனையின் நோக்கம். அவர்களை உடல் – உள ரீதியில் நோயாளிகளாக்கி மரணத்தைக் கொடுப்பதற்காக சிறைத் தண்டனை வழங்கப்படுவதில்லை. இலங்கை போன்ற நாடுகளில் சிறைத் தண்டனை என்பது எத்தனை கைதிகளைத் திருத்தியிருக்கின்றது? எத்தனை கைதிகளுக்கு மறுவாழ்வைக் கொடுத்திருக்கின்றது?

பொதுவாக மரண தண்டனைக் கைதிகள் கூட, அது பின்னர் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு, 20 அல்லது 21 வருடங்களில் விடுதலை செய்யப்பட்டு விடுகின்றார்கள். இங்கு 18 வயதில் கைதான மகேந்திரன் 27 வருங்களைச் சிறைக்கூண்டுக்குள் தொலைத்திருக்கின்றார். நான்கு சுவர்களுக்குள் அவரது வாழ்க்கை முடங்கிப் போயிருக்கின்றது. வாழ்க்கையின் முக்கியமான – இளமையான – இனிமையான 27 வருட காலத்தை இழந்த சோகம் கூட அவரது நோய்களுக்குக்  காரணமாக இருந்திருக்க வேண்டும்.

இரண்டு விடயங்களை இதில் கவனிக்க வேண்டும். ஒன்று – 18 வயதில் செய்த ஒரு குற்றத்துக்கு இந்தளவு கொடூரமான தண்டனை அவசியமா? என்பது. 18 வயது என்பது மேஜராகும் வயது. அதனால்தான் வழக்கைப் பதிவு செய்யும் போது அவரது வயது 19 எனக் குறிப்பிடப்பட்டதாகத் தெரிகின்றது. 18 வயது என்றால், இந்தளவு கொடூரமான தண்டனையைப் பெற்றுக்கொடுக்க முடியாது என்பதால் வயதைக் கூட பொலிஸார் மாற்றியிருக்கின்றார்கள். இந்த வயதில் செய்திருக்கக் கூடிய ஒரு குற்றம் சுய அறிவால் செய்யப்பட்டதா அல்லது தூண்டுதலால் செய்யப்பட்டதா என ஆராயப்பட்டிருக்க வேண்டும்.

இரண்டாவது – கிழக்கு மாகாணத்தில் அப்போது இடம்பெற்ற அந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பாக இருந்ததாகச் சொல்லப்படுபவர் பின்னர் அரசாங்கத்தில் இணைந்து பிரதி அமைச்சராகவும் இருந்திருக்கின்றார். பிரதான கட்சி ஒன்றின் பிரதித் தலைவராகவும் இருந்திருக்கின்றார். அவர் ஒரு சுதந்திர புருஷராக இராணுவப் பாதுகாப்புடன் நடமாடித் திரியும் போது, அதில் நேரடியாகச் சம்பந்தப்படாத இளைஞர் ஒருவர் கைதாகி இந்தளவு கொடூர தண்டனையையும் பெற்று சிறைக்குள்ளேயே மரணமடைந்திருப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?போர் முடிவுக்கு வந்து பத்து வருடங்களும் கடந்துவிட்டது. அரசியல் ரீதியான காரணங்களுக்காக கைதாகி தடுப்பில் உள்ளவர்களின் விவகாரம் உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய அவசியம் இச்சம்பவத்தினால் மேலும் அழுத்தி உணர்த்தப்பட்டிருக்கின்றது. அரசியல் கைதிகள் பல வகையாக இருக்கின்றார்கள். சிலருக்கு வழக்கோ விசாரணைகளோ இல்லை.

வேறு சிலர் விடுதலைப் புலிகளுக்கு உதவியவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைதாகி, குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் வாடுகின்றார்கள். ஒப்புதல் வாக்குமூலம் கடுமையான சித்திரவதைகளின் மூலம் பெறப்படும் ஒன்று. மரணமடைந்த மகேந்திரனும் அவ்வாறான ஒருவர்தான். அவரும் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் தண்டனை விதிக்கப்பட்டவர்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து பல வருட காலமாகவே பேசப்பட்டுவருகின்றது. ஜே.வி.பி. கிளர்ச்சியில் ஈடுபட்ட அனைவரும், கிளர்ச்சி முறியடிக்கப்பட்ட சிலமாதங்களிலேயே விடுதலை செய்யப்பட்டார்கள். அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.

ஜனநாயக அரசியலில் ஈடுபட அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களும் விடுதலைப் புலிகளைப் போல ஆயுதமேந்தி அரசுக்கு எதிரான போராட்டத்தை நடத்தியவர்கள்தான். தெருத்தெருவாக பலர் கொல்லப்பட்டு வீசப்பட்டமைக்கு காரணமாக இருந்தவர்கள். பொது மன்னிப்பில் கூட இனவாதம் பார்க்கப்படுகின்றது.

தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் இழுபறிப்படுவதற்கு காரணம் யார்? தமிழ் கட்சிகள் இணக்க அரசியலைச் செய்தும், முரண்பாட்டு அரசியல் செய்தும் கைதிகளின் விடுதலை குறித்து பெரிதாக எதனையும் சாதிக்கவில்லை. கடந்த ஐந்து வருட காலத்தில் மைத்திரி – ரணில் அரசைப் பாதுகாப்பதில் பிரதான பங்கை வகித்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான்.

கைதிகளின் விடுதலையைச் சாத்தியமாக்கியிருக்கக்கூடிய பல வாய்ப்புக்கள் அவர்களுக்கு இருந்தது. ஆனால், ரணிலுக்கு சங்கடத்தைக் கொடுக்கக்கூடாது என்பதால் அவர்கள் மௌனமாக இருந்தார்கள். இறுதியில் கம்பரரெலியா அரசியலின் மூலம் மக்கள் மனதை வெல்ல முயன்றார்கள். இறுதியில் அதுவும் தோல்விதான்.

கைதிகள் விவகாரம் கிணற்றில் போட்ட கல்லைப்போல அம்படியேதான் இருக்கின்றது. அதனால், சிறைச்சாலைக்குள்ளேயே 27 வருடங்களைத் தொலைத்த ஒவரை இழக்கவேண்டியதாயிற்று. மனோகரனின் மரணம்தான் சிறைச்சாலையில் இடம்பெற்ற இறுதி மரணமாக இருக்க வேண்டும். இதற்காக தமிழ்த் தரப்பினரிடம் உள்ள உபாயம் என்ன? கோத்தாபய அரசிடமிருந்து இதனை எவ்வாறு அவர்களால் சாதிக்க முடியும்?

தேர்தல் அரசியலையும், போட்டி அரசியலையும் ஓரங்கட்டிவிட்டு இது போன்ற பிரச்சினைகளை எவ்வாறு கையாளலாம் என்பதையிட்டு தமிழ்த் தலைமைகள் இப்போதாவது உருப்படியாக எதனையாவது செய்வது குறித்து ஆராய வேண்டும். இல்லையெனில் மேலும் மரணங்கள் குறித்த செய்திகள் சிறைச்சாலைகளிலிருந்து வருவதைத் தடுக்க முடியாது.
தாக்கப்பட்ட பெண் ஊழியர் கருணா அம்மான் வீடு சென்று நன்றி தெரிவிப்பு

தாக்கப்பட்ட பெண் ஊழியர் கருணா அம்மான் வீடு சென்று நன்றி தெரிவிப்பு

நிந்தவூர் கமநல சேவைகள் காரியாலயத்தில் அங்கு கடமையாற்றும் மேலதிகாரியினால் தாக்கப்பட்ட பெண் ஊழியர் தவப்பிரியா நேற்றைய தினம் முன்னாள் பிரதி அமைச்சர் கருணாவுக்கு நேரில் சென்று தனக்கு தாக்கிய அதிகாரியை கைது செய்ய முயற்சிகள் எடுத்தமைக்கும் வைத்தியசாலைக்கு வருகைதந்து பார்வையிட்டதற்கும் நன்றியினை தெரிவித்துள்ளார்.

அத்தோடு குறித்த அலுவலகத்தில் இருந்து வேறு இடத்திற்கு இடமாற்றம் பெற்றுத்தருவதற்கும் உதவி செய்யுமாறு மகஜர் ஒன்றினையும் கையளித்திருந்தார்.

குறித்த பெண் ஊழியர் தவப்பிரியா வை தாக்கிய மேலதிகாரி சம்மாந்துறை நீதிமன்னறத்தின் கட்டளைக்கமைய ஏழு நாட்கள் விளக்கமறியல் உள்ளார் என்பதும் குறிப்படத்தக்கதாகும்.
அன்று மட்டுமல்ல என்றைக்குமே பிரபாகரன்தான் தலைவர் : கருணா முழக்கம்

அன்று மட்டுமல்ல என்றைக்குமே பிரபாகரன்தான் தலைவர் : கருணா முழக்கம்

இப்போது இருக்கும் தமிழ் தலைவர்களை தூக்கி நிறுத்துவதற்கு நான்கு பணியாட்கள் வேண்டும் என்றும், அவர்களுக்கு காதும் கேட்காததுடன் கண் பார்வையும் இல்லை எனவும் விநாகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அதோடு தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் வே.பிரபாகரன் மட்டுமே தமிழ் மக்களின் தேசிய தலைவா் என கருணா கூறியுள்ளார். அம்பாறை – பாண்டிருப்பு பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டபோதே கருணா இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் தன்னை துரோகி என கூற தேசிய தலைவர் மாத்திரமே உரிமை உள்ளதாகவும் , ஆனால் இறுதிவரை தலைவர் தன்னை துரோகி என்று கூறவில்லை எனவும் கருணா கூறியுள்ளார்.

இன்று பலர் அரசியற்கட்சி தலைவர்களை தேசிய தலைவர் என்று விழிக்கின்றதாகவும் தேசிய தலைவர் என்றால் தலைவர் பிரபாகரன் மாத்திரமே என்றும் குறிப்பிட்ட கருணா, அது ஒரு வரலாற்று அத்தியாயம் எனவும் அதை மீண்டும் உருவாக்க முடியாது என்றும் கருணா இதன்போது மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.